கைதிகளிடம் உறவினர்கள் பேச இன்டர்காம் வசதி
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் கைதிகளிடம் உறவினர்கள் பேசுவதற்கான இன்டர்காம் வசதியை டி.ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் தொடங்கி வைத்தார்.
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் கைதிகளிடம் உறவினர்கள் பேசுவதற்கான இன்டர்காம் வசதியை டி.ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் தொடங்கி வைத்தார்.
மத்திய ஆண்கள் ஜெயில்
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று சுமார் 980 பேர் உள்ளனர். வாரந்தோறும் குண்டர் தடுப்பு மற்றும் தண்டனை கைதிகளை அவரது உறவினர்கள், பார்வையாளர்கள் செவ்வாய், வியாழக்கிழமைகளில் சந்தித்து பேசவும், விசாரணை கைதிகளை திங்கள், புதன் வெள்ளிக்கிழமைகளில் பார்த்து பேசவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு கைதியையும் பார்க்க 3 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஜெயில் வளாகத்தில் கம்பிகளுக்கு இடையில் சுமார் 2 மீட்டர் தூரத்தில் நின்று அவர்கள் பேசுவார்கள். வக்கீல்களும் இதேபோன்றுதான் பேசுகிறார்கள். ஒரேநேரத்தில் பலர் பேசுவதால் வயதான கைதிகள் தங்களின் உறவினர்கள், வக்கீல்கள் பேசுவதை சரியாக புரிந்து கொள்ள முடியாதநிலை இருந்தது. எனவே சிலர் அதிக சத்தமாக பேசினார்கள். அதனால் கைதிகள், உறவினர்களிடம் தெளிவாக பேச முடியாத நிலையை போக்க மத்திய ஜெயில்களில் இன்டர்காம் வசதி ஏற்படுத்த ஜெயில்துறை நிர்வாகம் முடிவு செய்தது.
இன்டர்காம் வசதி
அதன்படி வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் இருபுறமும் இன்டர்காம் வைத்து கைதிகளும், உறவினர்களும் பேச வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனை வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாமரைகண்ணன் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
முதற்கட்டமாக தற்போது 10 இன்டர்காம் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் கைதிகள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேசினார்கள்.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், கைதிகள் அவர்களின் உறவினர்களிடம் பேசும் சமயத்தில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. அவற்றை போக்க இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன் கைதிகள் அதிகமான கூச்சல் நிலவி வந்ததால் தெளிவாக பேச முடியவில்லை. தற்போது இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தெளிவாக பேச முடிகிறது என்று தெரிவித்தனர்.