பள்ளிகளுக்கு இடையே கலைத்திருவிழா தொடக்கம்

பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா தொடங்கியது. இதில் மணல் சிற்பம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தினர்.

Update: 2023-10-19 19:00 GMT


பொள்ளாச்சியில் தெற்கு ஒன்றியம் சார்பில் பள்ளி அளவிலான கலை திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உதவி திட்ட அலுவலர் குமார்ராஜா தொடங்கிவைத்து பார்வையிட்டார். இதில் வட்டார கல்வி அலுவலர் கிளாரி ஸ்டெல்லா, மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் 30 பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர். 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், 9 முதல் 10 வரையும் மற்றும் 11, 12-ம் வகுப்புகளுக்கு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகள் நாளை (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-


கலை செயல்பாடுகளில் குழந்தைகளின் உள்சார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வரக்கூடிய சூழலை உருவாக்க கலை திருவிழா நடத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு, அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள பராம்பரிய கலைகள் மற்றும் பண்பாட்டை தெரிந்து கொள்ள உதவுகிறது.

மணல் சிற்பம், புகைப்படம் எடுத்தல், பேச்சுபோட்டி, கதை எழுதுதல், கவிதை, ஓவியம் என 30 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் வட்டார அளவில் வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வார்கள். அதன்பிறகு மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்