தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கடையநல்லூர்:
தமிழகத்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிறப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ேநற்று நடந்தது. தென்காசி மாவட்டம் இடைகாலில் தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
15.70 லட்சம் பேருக்கு...
தமிழகம் முழுவதும் 31-வது தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் மையங்களில் நடைபெற்றுள்ளது. இதில் 15 லட்சத்து 70 ஆயிரத்து 651 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 2 ஆயிரம் முகாம்களில் 72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 94.68 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 85.47 சதவீதத்தினர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். குழந்தைகளுக்கான தடுப்பூசியை பொறுத்தவரை 94.22 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 84.03 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
தீவிர கண்காணிப்பு
உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இத்தொற்று வேகமாக பரவும் என்று கூறப்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படாதது ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது. எனினும் தமிழகத்தில் இந்த தொற்று பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பன்னாட்டு விமான நிலையங்களின் வழியாக வருகிறவர்களில் 2 சதவீதம் பேர் ரேண்டமாக தேர்வு செய்யப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றனர்.
மருத்துவ கல்லூரி
அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 36 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. தென்காசி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் இல்லை. இதுதொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
ஒரு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு ரூ.400 கோடி செலவாகும். இதில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக 40 ஏக்கர் இடத்தை தருவதாக தன்னார்வலர் தெரிவித்துள்ளார். இதனால் இடம் கிடைப்பதற்கான பிரச்சினை எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் ஆகாஷ், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.