சென்னையில் நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கும் பணி தீவிரம் -ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னையில் நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-05 21:57 GMT

சென்னை,

ஏழை-எளிய மக்களுக்கு அவர்களது வசிப்பிடங்களுக்கு அருகாமையிலேயே சிகிச்சை அளிக்க ஏதுவாக 708 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிகளில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவையில் அறிவித்தார். அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை அமைக்க முதல் கட்டமாக 140 நிலையங்களுக்கும், 2-ம் கட்டமாக 60 நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் ஒரு டாக்டர், ஒரு மருந்தாளுநர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் என 4 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். ஒவ்வொரு நல வாழ்வு மையம் அமைக்கவும் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

முதல்-அமைச்சரின் அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 200 புதிய நகர்ப்புற நல வாழ்வு மையங்களை அமைப்பது தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் கடந்த மாதம் 13-ந்தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு நலவாழ்வு மையங்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை அமைக்க இடங்களை தேர்வு செய்து விரைந்து பணிகளை தொடங்க அமைச்சர்களால் அறிவுறுத்தப்பட்டது.

3 இடங்களில் தயார் நிலையில்...

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் இதுவரை 98 இடங்களில் புதிய கட்டிடங்கள் அமைத்து நல வாழ்வு மையங்களை அமைக்கவும், 75 இடங்களில் ஏற்கனவே உள்ள மாநகராட்சி கட்டிடங்களில் நல வாழ்வு மையங்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

24 இடங்களில் சரியான இடத்தினை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3 இடங்களில் நல வாழ்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்