திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளை தயார்படுத்தும் பணி தீவிரம்

திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.

Update: 2022-06-10 20:50 GMT

திருச்சி:

பள்ளிகள் திறப்பு

கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படவில்லை. பின்னர் கொரோனா தாக்கம் குறைந்ததால் கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறையும் விடப்பட்டது. இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் எல்.கே.ஜி. வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளி சுவர்களில் வர்ணம் பூசுதல், கழிவறைகளை சுத்தம் செய்தல், விடுதிகளை தயார்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் கொண்டு வரப்பட்ட விலையில்லா பாடப்புத்தகங்களை தயார்நிலையில் அடுக்கி வைத்தனர்.

கிருமிநாசினி திரவம்

மேலும், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் பள்ளிகளில் கிருமிநாசினி திரவம் தெளிக்கும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விலையில்லா பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

முதல்நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சீரமைப்பு பணிகள் முடிந்து ஓரளவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுவிட்டன. ஒரு சில பள்ளிகள் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்