ரேஷன் கடைகளில் வங்கி கணக்கு விவரம் சேகரிப்பு பணி தீவிரம்
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் வங்கி கணக்கு விவரம் சேகரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் வங்கி கணக்கு விவரம் சேகரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரேஷன் கடை
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கல்பண்டிகையொட்டி வழங்கப்படும் பரிசு தொகுப்பு பொருட்கள் ரேஷன்கார்டுகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கு விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் குடம்ப அட்டைதாரர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை ஊழியர்கள் சேகரித்து வருகின்றனர்.
இதில் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரம் மட்டும் சேகரிக்கப்படுகிறது.
ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக வங்கி கணக்கு விவரம் சேகரிக்கப்படுகிறது. ஆனால் எந்த திட்டத்துக்கு என்று அதிகார பூர்வ தகவல் வரவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் நிவாரண உதவி வழங்குவதில் இடையூறுகள் இருந்தது. எனவே, பொதுமக்களுக்கு உதவிகள் வழங்க டிஜிட்டல் முறையை கையாள இந்த வங்கி கணக்கு விவரம் சேகரிக்கப்படுகிறது.
ஏற்கனவே வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்திருந்தால் அவர்கள் ரேஷன்கடைகளில் வங்கி புத்தகத்தின் முதல்பக்க நகல் வழங்கலாம்.
வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காதவர்கள், உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கி கணக்கு
அதன்பின்னர் வங்கி கணக்கு விவரத்தை ரேஷன் கடையில் அளிக்க வேண்டும். ஆதார் எண் இணைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கு விவரத்தை கொடுக்கலாம். வங்கி கணக்குகள் எதுவும் இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
அவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் பணம் இல்லாத வங்கிக்கணக்கு (ஸீரோ பேலன்ஸ்) தொடங்கப்படும். வங்கி கணக்கு விவரங்களை ஊழியர்கள் சேகரிக்க முதல்கட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன்அட்டைதாரர்களிடம் ஆதார் எண்ணை கேட்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.