ஈரோட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

ஈரோட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-09-14 21:08 GMT

ஈரோட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

டெங்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், அரசின் உத்தரவின்பேரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கொசு ஒழிப்பு பணிகள் உள்ளாட்சி அமைப்புகள் சார்பிலும், சுகாதாரத்துறை சார்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் தினந்தோறும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் ஈரோடு மாநகரில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாநகராட்சி சார்பில் காய்ச்சல் முகாம், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தனி வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.

250 பணியாளர்கள்

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சியில் கடந்த காலங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதிகள் 'பிளாக் ஸ்பாட்'ஆக கண்டறியப்பட்டு அங்கு டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 250 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஈரோடு மாநகராட்சியில் 3-ம் மண்டலத்துக்கு உள்பட்ட திண்டல், காரப்பாறை, புதுமைக்காலனி ஆகிய பகுதிகளில் காலி இடம் மற்றும் கட்டுமான பணிகள் கட்டிடத்தில் தேங்கி நிற்கும் நன்நீரில் டெங்கு கொசு உற்பத்தி ஆவதால் அங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஒரு குழு அமைக்கப்பட்டு அங்கு ஏடிஎஸ் கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது.

தற்போது வரை ஈரோடு மாநகராட்சியில் டெங்கு பாதிப்பு யாருக்கும் இல்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்