வேலூர் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணி தீவிரம்
வேலூர் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி, வாடகையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி, வாடகையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரிவசூல் பணி
வேலூர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஆதாரம் என்பது முக்கிய பங்காக உள்ளது. மாநகராட்சியின் சொத்துக்களை ஏலம் விடுதல் உள்ளிட்ட வாடகைகள், சொத்து வரி, தண்ணீர் வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மாநகராட்சிக்கு நிதி ஆதாரம் கிடைக்கிறது.
ஆனால் மேற்கண்ட வாடகை மற்றும் வரிகளை பலர் செலுத்தாமல் உள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நிதிச்சுமையில் இருந்து மீளவும், பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை அளிக்கவும் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி சமீப காலமாக வரிவசூலிக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ரூ.120 கோடி
இந்த நிதியாண்டில் சுமார் வாடகை மற்றும் வரிகள் என ரூ.75 கோடி வரை மாநகராட்சிக்கு வரவேண்டி உள்ளது. ஆனால் கடந்த நிதி ஆண்டுகளில் நிலுவையில் உள்ள வரித்தொகை கிட்டத்தட்ட ரூ.85 கோடி அளவுக்கு உள்ளதாக தெரிகிறது. எனவே நிலுவையில் உள்ள மொத்த பாக்கி ரூ.160 கோடியை வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டதன் பேரில் இதுவரை ரூ.40 கோடி வரை வசூலாகி உள்ளது. மீதம் உள்ள ரூ.120 கோடியை வசூலிக்கும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் உரிய காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டிய வரிகளை தாமாக முன்வந்து செலுத்துவதுடன், நிலுவை இல்லை என்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.