மானாவாரி நிலங்களில் விவசாய பணி தீவிரம்

பட்டிவீரன்பட்டி பகுதியில் கொட்டித்தீர்த்த மழை எதிரொலியாக, மானாவாரி நிலங்களில் விவசாய பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-08-14 16:30 GMT

 விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், அய்யம்பட்டி, ரெங்கராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும், தாண்டிக்குடி மலையடிவார புனல்காடு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது.

இதன் எதிரொலியாக, மானாவாரி விவசாய நிலங்களில் விதைகள் விதைப்பதற்கு ஏற்ற ஈரப்பதம் உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக நிலங்களை உழுது, விதைகளை விதைக்க தொடங்கியுள்ளனர். ஆடி மாத தொடக்கத்தில், போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகளுக்கு, தற்போது பெய்த மழை வரப்பிரசாதமாக அமைந்தது.

90 நாட்களில் அறுவடை

டிராக்டர் மற்றும் மாடுகளை பூட்டி விவசாயிகள் நிலங்களை உழுகிற காட்சியை பட்டிவீரன்பட்டி பகுதியில் காண முடிகிறது. உழவு செய்த நிலங்களில் நிலக்கடலை, தட்டாம் பயிறு, மொச்சை, சோளம், பருத்தி, கம்பு ஆகியவற்றை விதைத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் உழவு செய்தல், விதை விதைத்தல், உரம், கூலி என ஏக்கருக்கு ரூ.25 முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து வருகிறோம். முறையாக மழை பெய்தால் 90 நாட்களில் மானாவாரி பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும். மாடுகள் மூலம் உழவு செய்த நிலங்களில் நிலக்கடலையை விதைத்து வருகிறோம். டிராக்டர்களை கொண்டு உழுத நிலங்களில் சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை விதைத்துள்ளோம் என்றனர்.

இதுதொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகள் கூறும்போது, மானாவாரி விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களான உயிர் உரம், நுண்ணூட்ட உரம், விதைகள் போன்றவற்றை விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையை மட்டும் காண்பித்து, ஆத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்