சிவகாசியில் ரூ.2½ கோடியில் அறிவுசார் மையம்

சிவகாசி பகுதியில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக ரூ.2 கோடியே 61 லட்சம் செலவில் அறிவுசார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-10 18:45 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதியில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக ரூ.2 கோடியே 61 லட்சம் செலவில் அறிவுசார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்துள்ளார்.

போட்டித்தேர்வு

கடந்த பல ஆண்டுகளாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் சாதனை படைத்து வரும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் போட்டித்தேர்வு எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் தனியார் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளித்து வருகிறது. வசதி படைத்த மாணவர்கள் இந்த பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு சாதனை படைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது சிவகாசியில் அறிவுசார் மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கான நடவடிக்கையை மேயர் சங்கீதாஇன்பம் மேற்கொண்டார். அதன்பயனாக தமிழக அரசு ரூ.2 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கி, அண்ணாமலை நாடார்-உண்ணா மலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அதற்கான இடத்தை ஒதுக்கி அறிவித்தது.

முதல்வருக்கு நன்றி

இது குறித்து மேயர் சங்கீதா இன்பம் கூறியதாவது:- கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிவகாசியில் ரூ.2 கோடியே 61 லட்சம் செலவில் அறிவுசார் மையம் அமைக்கப்படுகிறது. நகரின் மையப்பகுதியில் அமைக்கப்படும் இந்த அறிவுசார் மையம் போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இதற்கான கட்டுமான பணி விரைவில் தொடங்க உள்ளது. பணிகள் தொடங்கி தரமான கட்டிடம் கட்டி விரைவில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அதற்கு உதவியாக இருந்த அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், நேரு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்