ஆவடி அருகே ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை - சிகிச்சை மையம்

ஆவடி அருகே ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை - சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தனர்.

Update: 2023-09-25 08:41 GMT

காசநோய் சிகிச்சை மையம்

தமிழக அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பாக ஆவடியை அடுத்த கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.பின்னர் 30 பயனாளிகளுக்கு தலா ரூ.1,600 வீதம் மொத்தம் ரூ.48 ஆயிரம் மதிப்பீட்டிலான காச நோய் மருந்து பெட்டகங்களையும், 30 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து பெட்டகங்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்கள்

தமிழ்நாட்டில் ஏற்கனவே காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 48 டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. மலை கிராமங்கள், குக்கிராமங்கள் என்று எல்லா இடங்களுக்கும் இந்த வாகனங்கள் சென்று, பொதுமக்களை பரிசோதனை செய்யும் விதமாக டிஜிட்டல் எக்ஸ்ரே எடுத்து அங்கிருந்து ஆஸ்பத்திரிகளுக்கும் பரிமாற்றம் செய்து யாருக்கு காசநோய் உள்ளது? என்பதை உடனடியாக தெரிந்து கொள்வதற்காக இந்த வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதில் 23 வாகனங்களை கடந்த ஜூலை மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

உணவு பெட்டகம்

தமிழ்நாட்டில் தற்போது 86 ஆயிரம் காசநோயாளிகள் உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்கும் திட்டமும் தற்போது செயல்பாட்டில் உள்ளது. அந்த வகையில் இதுவரை ரூ.16 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த 86 ஆயிரம் பேரில் பெரும் பகுதியானவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,600 மதிப்பீட்டிலான புரதச்சத்துடன் கூடிய உணவு பெட்டகம் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நலம் விசாரிப்பு

அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஆரணி பகுதியில் எலுமிச்சை சாறு குடித்து ஒவ்வாமை ஏற்பட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எலுமிச்சை சாறில் ஐஸ் க்யூபுக்கு பதிலாக ஐஸ் பேக் என்று சொல்லக்கூடிய ஒத்தடம் தரக்கூடிய ஐஸ் பேக்கை அவர்கள் தவறுதலாக பயன்படுத்தியதால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது நலமாக இருக்கிறார்கள். விரைவில் சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்புவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்