மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்

நலத்திட்டங்களை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை களைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் தழுதாழையில் இன்று நடக்கிறது.

Update: 2023-08-30 17:41 GMT

நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-III (2023-24) உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது. வேப்பந்தட்டை தாலுகாவில் இன்று (வியாழக்கிழமை) தழுதாழை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நாளை (வெள்ளிக்கிழமை) தொண்டபாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது.

இதேபோல் ஆலத்தூர் தாலுகாவில் வருகிற 5-ந்தேதி பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 7-ந்தேதி டி.களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 8-ந்தேதி தெரணி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 12-ந்தேதி கொளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 14-ந்தேதி சிறுகன்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது.

முகாம்

குன்னம் தாலுகாவில் வருகிற 15-ந்தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 16-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த மருத்துவ முகாம் குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 19-ந்தேதி பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 20-ந்தேதி ஆண்டிகுரும்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 21-ந்தேதி சின்னவெண்மணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது. மருத்துவ முகாம்களில் சிறப்பு மருத்துவர்களான கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், யு.டி.ஐ.டி. அட்டை பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பதிவுகள் செய்யவுள்ளனர்.

எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குடும்ப அட்டை நகல் அல்லது புதிய குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-6 மற்றும் தேசிய அடையாள அட்டை புதுப்பித்து கொள்பவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்