ரூ.35¼ கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: கட்டுமான பணிகளை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு

ரூ.35¼ கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுமான பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பரேஷ் உபாத்தியா ஆய்வு செய்தார்.

Update: 2022-09-08 14:53 GMT

பொள்ளாச்சி

ரூ.35¼ கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுமான பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பரேஷ் உபாத்தியா ஆய்வு செய்தார்.

நீதிபதி ஆய்வு

பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் கோர்ட்டுகள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படுகிறது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தற்போதைய கோர்ட்டுகளுடன், கூடுதலாக 6 கோர்ட்டுகள் சேர்த்து மொத்தம் 10 கோர்ட்டுகளும் மற்றும் 5 நீதிபதிகள் குடியிருப்புகள் சேர்த்து மொத்தம் ரூ.35 கோடியே 39 லட்சம் செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், கோவை மாவட்ட நீதிமன்றங்களின் பொறுப்பாளருமான நீதிபதி பரேஷ் உபாத்தியா கோர்ட்டு கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோவை மாவட்ட நீதிபதி ராஜசேகர், மாவட்ட குற்றவியல் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், சப்-கோர்ட்டு நீதிபதி மோகனவள்ளி, மாவட்ட உரிமையியல் முதன்மை நீதிமன்ற நீதிபதி ஆனந்தி, மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாரதிராஜன், நீதிபதிகள் சுவேதா ராஜன், மணிகண்டன், வக்கீல்கள் சங்க தலைவர் வக்கீல் துரை, அரசு வக்கீல் தேவசேனாதிபதி, சங்க செயலாளர் கணேஷ் மற்றும் பலர் இருந்தனர்.

கூடுதல் மாவட்ட நீதிமன்றம்

முன்னதாக ஐகோர்ட்டு நீதிபதி பரேஷ் உபாத்தியாவிடம், பொள்ளாச்சியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் பொள்ளாச்சியில் தொடங்க வேண்டும் என்று பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து வக்கீல்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க அனுமதி கிடைத்து உள்ளது. ஆனால் கட்டிட வசதி இல்லாததால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் இங்கிருந்து வழக்கில் ஆஜராக வக்கீல்களும், பொதுமக்களும் கோவைக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது. இதற்கிடையில் கூடுதல் சப்-கோர்ட்டு அமைப்பதற்கு அனைத்து வசதிகளும் செய்து தயாராக உள்ளது. எனவே அங்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்