ரூ.399-க்கு டிஜிட்டல் முறை விபத்து காப்பீடு திட்டம்

ரூ.399-க்கு டிஜிட்டல் முறை விபத்து காப்பீடு திட்டத்தில் சேரலாம்.;

Update: 2023-01-28 18:45 GMT

ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியதாவது:- சாமானியர்கள் ஆண்டுக்கு வெறும் ரூ.399 கட்டினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சாமானிய மக்களுக்கும் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 18 வயது முதல் 65 வயது வரை அனைவரும் சேர்ந்து பயன் அடையலாம். தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை சரிபார்ப்பு மூலம் வெறும் 5 நிமிடத்தில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த காப்பீடு வழங்கப்படுகிறது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் மற்றும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளில் உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரையும் வழங்கப்படும். மேலும், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.ஆயிரம் வீதம் 10 நாட்களுக்கு வழங்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரையும், விபத்தினால் உயிரிழந்தால் ஈமக்கிரியை செய்ய ரூ.5 ஆயிரம் வரையும் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்