விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில் விதைகளை வாங்கி பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில் விதைகளை வாங்கி பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Update: 2023-08-01 18:36 GMT

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மக்காச் சோளம் மற்றும் பருத்தி அதிகமான பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. இப்பயிர்களை விதைப்பு செய்ய ஆடிப்பட்டம் மிகவும் ஏற்றதாகும். எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கும்போது தமிழ்நாடு அரசால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்க வேண்டும். அவ்வாறு, விதைகளை வாங்கும்போது விதைப் பைகளில் உள்ள விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள பயிர் ரகம், காலாவதியாகும் நாள், குவியல் எண், அவரவர் பகுதிக்கு ஏற்றவையா என்பவற்றை பார்த்து வாங்க வேண்டும். மேலும், விதைகளை வாங்கும்போது ரசீதில் விதையின் ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. தாங்கள் விற்கும் விதைக்கு ரசீதை தவறாமல் வழங்க வேண்டும். விவசாயிகள் விதைகளை விதைக்கும்போது மண்ணில் போதிய ஈரம் இருக்க வேண்டும். அறுவடை முடியும் வரை அந்த ரசீதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ரசீது இருந்தால் தான் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் உரிய இழப்பீடு கோர முடியும். இந்த தகவலை திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்