உயிர் உரங்களை குறித்த காலத்தில் உற்பத்தி செய்து வழங்க வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உயிர் உரங்களை குறித்த காலத்தில் உற்பத்தி செய்து வழங்க வேளாண் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உயிர் உரங்களை குறித்த காலத்தில் உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என்று சென்னை வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சுந்தர் அறிவுறுத்தினார்.
ஆய்வு
தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதற்கான உரத் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக சென்னை வேளாண்மை இயக்குனர் அலுவலக துணை இயக்குனர் (உரம்) சுந்தரம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அவர் ஸ்பிக் நிறுவனத்தில் யூரியா உரம் உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டார்.
தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள குடோனில் இறக்குமதி செய்து வைக்கப்பட்டு உள்ள பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்களை ஆய்வு செய்தார்.
அறிவுறுத்தல்
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை துறையின் கீழ் இயங்கி வரும் திரவ உயிர் உற்பத்தி மையத்தில் உயிர் உரங்கள் தயாரிக்கும் பணியை ஆய்வு செய்தார். குறித்த காலத்தில் உயிர் உரங்களை உற்பத்தி செய்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களுக்கு விரைந்து அனுப்ப அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், துணை இயக்குனர் செல்வின், துணை இயக்குனர் (மாநில திட்டம்) பழனி வேலாயுதம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்