தற்காலிக ஆசிரியர்களுக்கு பதிலாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி
அரசுக்கு பணப்பிரச்சினை என்றால், தற்போதைக்கு ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமித்து, பின்னர் அவர்களை நிரந்தரப்படுத்தலாமே? என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
அரசுக்கு பணப்பிரச்சினை என்றால், தற்போதைக்கு ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமித்து, பின்னர் அவர்களை நிரந்தரப்படுத்தலாமே? என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
தற்காலிக ஆசிரியர் நியமனம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2013-ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண்ணில் எனக்கான பணிவாய்ப்பு பறிபோனது. இந்தநிலையில் தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு பல வழிகாட்டுதல்களை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால் அதில் இட ஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் கூறப்படவில்லை.
எனவே தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தும், அதன் அடிப்படையில் பணி நியமன நடவடிக்கைகளை தொடர இடைக்காலத்தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதி கேள்வி
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே இடைக்காலத்தடை விதித்து உள்ளது. ஆனால் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இது போல 2 உத்தரவு இருக்கும் போது, எதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்? எனவே, இதற்கு தீர்வு காண்பது அவசியம், என்றார்.
மேலும் இந்த வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்த போது, "அரசுக்கு பணப்பிரச்சினை என்றால், தற்போதைக்கு தொகுப்பூதிய அடிப்படையில், ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம். பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே? ஏனென்றால் தற்காலிக ஆசிரியர்களை நியமித்தால், சிறிது நாட்களிலேயே அவர்கள் தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பார்கள் அல்லவா?" என கேள்வி எழுப்பினார்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.