தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முறையாக குற்ற வழக்கு ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? என்று நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் போலீஸ் சூப்பிரண்டு ஆண்டுதோறும் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பராமரிப்பு
அங்கு, தூத்துக்குடி நகர உட்கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், முத்தையாபுரம், தாளமுத்துநகர், தெர்மல்நகர் மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முக்கிய வழக்குகளில் தொடர்புடையவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவது தொடர்பாகவும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அனைத்து ஆவணங்களையும் எந்தவித விடுதலும் இன்றி முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.