தொழிற்நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு-3 சிறுமிகள் மீட்பு
சேலம் மாவட்டத்தில் தனியார் தொழிற் நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 3 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
ஆய்வு
சேலம் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் நிறுவனங்கள், நூற்பாலைகள், கோழிப்பண்ணைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அதாவது, சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சைல்டு லைன் அமைப்பு, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினரால் பல்வேறு தனியார் தொழிற் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது சில நிறுவனங்களில் 3 சிறுமிகள் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததால் அவர்களை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து சிறுமிகளை வேலைக்கு அமர்த்திய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை
மேலும், 3 சிறுமிகளை பணிக்கு அமர்த்திய சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர், குழந்தை தொழிலாளர் தடுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர் சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் அபாயகரமான தொழில்களில் 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பணியில் சேர்த்தது கண்டறியப்பட்டால் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.