செங்கல் சூளை, கடைகளில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு
பழனி பகுதிகளில் செங்கல் சூளை, கடைகளில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தொழிலாளர் துறை உதவி ஆணையர் சிவசிந்து, தொழில் பாதுகாப்பு இணை இயக்குனர் அமர்நாத் ஆகியோர் தலைமையிலான அலுவலர்கள் பழனி டவுன், அடிவாரம் பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். அப்போது கடை உரிமையாளர்களிடம் குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை வேலைக்கு வைக்கக்கூடாது என அறிவுறுத்தினர்.
தொடர்ந்து பாலசமுத்திரம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், பெண்களிடம் கொத்தடிமைகளாக நடத்துகிறார்களா? என கேட்டு அறிந்தனர்.
இந்த ஆய்வு குறித்து தொழிலாளர் நலத்துறையினர் கூறும்போது, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வின்போது பள்ளி இடைநின்ற மாணவர்கள் வேலைக்கு இருந்தால் அவர்கள் படிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை கல்வித்துறையுடன் இணைந்து செய்து வருகிறோம். மேலும் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.