கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
திருப்பத்தூரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 3 கிலோ கிரில் சிக்கனை பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல் அருகே சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உணவங்களில் ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி, நகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ரஹிம் ஆகியோர் தனித்தனியாக நேற்று துரித மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது தந்தூரி, கிரில் சிக்கன்களில் அதிக வர்ணம் சேர்க்கக் கூடாது. முதல் நாள் பயன்படுத்திய எண்ணெயை, மறுநாள் பயன்படுத்தக் கூடாது. ஓட்டல்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முதல் நாள் இறைச்சிகளை அடுத்த நாள் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்துவது பரிசோதனையில் தெரிய வந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
3 கிலோ பறிமுதல்
பின்னர் இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் 11 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரு கடைக்கு லைசன்ஸ் வாங்கவில்லை. அந்தக் கடைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் 2 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது.
அவற்றில் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் இருந்த பழைய கிரில் சிக்கன் 3 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்றனர்.