நெல்லை-தென்காசி இடையே மின்சார ரெயில் பாதையில் அதிகாரிகள் ஆய்வு - நாளை நடக்கிறது
நெல்லை-தென்காசி இடையே மின்சார ரெயில் பாதையில் அதிகாரிகள் நாளை ஆய்வு நடத்துகிறார்கள்.
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரெயில் இயக்க வசதிக்காக மின்மயமாக்கல் பணிகள் நடந்து வருகிறது. இதில் மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட கேரள மாநில எல்லைப்பகுதிகளில் மின்மயமாக்கல் பணிகள் முடிந்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. அதாவது, புனலூர்-கொல்லம் ரெயில்பாதையில் மின்மயமாக்கல் பணிகள் முடிந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழக எல்லைக்குள் இந்த பணிகள் மிகவும் தாமதமாக தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கிடையே, நெல்லை-தென்காசி இடையேயான 72 கி.மீ. தூர ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் முடிந்து தற்போது போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக மின்சார ரெயில் என்ஜின் சோதனை நேற்று நடந்தது. அதனை தொடர்ந்து, நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி வரையிலான பாதையை தென்னக ரெயில்வே முதன்மை தலைமை மின்மயமாக்கல் என்ஜினீயர் நாளை (திங்கட்கிழமை) ஆய்வு செய்ய உள்ளார்.
இந்த ஆய்வானது, நெல்லையில் இருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும். பின்னர் தென்காசியில் இருந்து நெல்லைக்கு மின்சார ரெயில் சோதனை நடத்தப்படும். இந்த பணிகள் அன்றையதினம், மாலை 4.30 மணியுடன் நெல்லை ரெயில் நிலையத்தில் முடிவடையும் படி திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார ரெயில் இயக்குவதற்கு வசதியாக வீரவநல்லூரில் ரெயில்வே சார்பில் துணை மின் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் மற்றும் பேட்டையில் மின் கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் துணை பிரிவு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை கோட்டத்தில், மின்மயமாக்கல் பணிகளை பொறுத்தமட்டில், விருதுநகர்-தென்காசி இடையே 122 கி.மீ. தூரத்துக்கும், தென்காசி-பகவதிபுரம் இடையே 14 கி.மீ.தூரத்துக்கும், எடமன்-புனலூர் ரெயில் நிலைய எல்லை வரையிலான 8 கி.மீ. தூரம் ஆகிய பகுதிகளில் இந்த மாத இறுதிக்குள் மின்மயமாக்கல் பணிகள் முடியும். எடமண்-பகவதிபுரம் இடையே 35 கி.மீ.தூர மின்மயமாக்கல் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.