வேளாண் பணிகளை வேளாண்மை வணிகத்துறை இயக்குனர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் வேளாண் பணிகளை வேளாண்மை வணிகத்துறை இயக்குனர் நடராசன் ஆய்வு செய்தார்.

Update: 2023-02-02 16:59 GMT

இயக்குனர் ஆய்வு

தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கள ஆய்வில் முதல்- அமைச்சர்' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளார். முதல் கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெறும் பணிகளை இந்த திட்டத்தின் கீழ் சிறப்பான முறையில் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வேளாண்மை துறை மற்றும் அதன் சார்புத்துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை இயக்குனர் ச.நடராசன் ஆய்வு மேற்கொண்டார்.

கலந்துரையாடல்

வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தை, மாதனூர் வட்டாரத்தில் அமைந்துள்ள மலைகிராமமான பனங்காட்டேரி, கந்திலி வட்டாரத்தில் இலவம்பட்டி கிராமம் ஆகிய இடங்களில் கலைஞரின் அனைந்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டப் பணிகளை ஆய்வு செய்து, பயனாளிகளுடன் நேரடியாக கலந்துரையாடினார்.

பின்னர், ஏலகிரி மலையில் அமைந்துள்ள பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். திருப்பத்தூர், ஆலங்காயம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் பாலா, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை இணை இயக்குனர் முரளிதரன், துணை இயக்குனர்கள் நாசர், சிவகுமார், துணை இயக்குனர் ராமச்சந்திரன், பச்சையப்பன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பாத்திமா, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்