கீழ்முட்டுக்கூர் ஊராட்சியில் வருவாய்த்துறையினர் ஆய்வு

சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு குறித்து கீழ்முட்டுக்கூர் ஊராட்சியில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-02-09 16:53 GMT

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் தாலுகா கீழ்முட்டுக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுடுகாட்டு பகுதி ஆக்கிரமித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் வருவாய்த்துறைக்கு புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் அ.கீதா, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் டி.ஆனந்து, குறுவட்ட அளவர் ரம்யா உள்பட வருவாய் துறையினர் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் அங்கிருந்த செடி கொடி போன்றவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, அளவீடு செய்தனர். அப்போது அங்கே கூடுதலாக அரசுக்கு சொந்தமான இடம் இருந்தது தெரிய வந்தது.

இந்த இடத்தை கீழ்முட்டுக்கூர், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராம மக்கள் சுடுகாட்டு பயன்பாட்டுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதனால் மீண்டும் இருதரப்பைச் சேர்ந்த பொது மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் முடிவில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள இடத்தை அவர்களே பயன்படுத்திக் கொள்ளவும், சுடுகாட்டுக்கு இடமில்லாத கீழ் முட்டுக்கூர் கிராம மக்களுக்கு விரைவில் இடம் தேர்வு செய்து வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்