குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் ஆய்வு
கடலூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் ஆய்வு செய்தார். அப்போது உரிமம் பெறாமல் கடைகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
கடலூர்
ஆணையர் ஆய்வு
தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால் வேணா நேற்று கடலூர் வந்தார். தொடர்ந்து அவர் கடலூர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை, வழிசோதனைப்பாளையம், கேப்பர்மலை ஆகிய பகுதியில் செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கோடை காலமாக இருக்கிறது. தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். ஆகவே பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். காலி கேன்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், அனைத்து கேன்களிலும், பாட்டில்களிலும் தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
உணவு பாதுகாப்பு உரிமம்
அதையடுத்து உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்று குடிநீர் நிறுவனம் நடத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். குடிநீர் எங்கு இருந்து எடுக்கப்படுகிறது. போர்வெல் ஆழம் எவ்வளவு? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பிறகு கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டை ஆய்வு செய்து, மீன் விற்பனை செய்பவர்களிடம் தரமான மீன்களை விற்பனை செய்ய வேண்டும், கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது, ரசாயனம் தெளித்த மீன்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.
நடவடிக்கை
தொடர்ந்து அவர் கூறுகையில், அனைத்து உணவு உற்பத்தி நிறுவனங்கள், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பொருட்கள் வினியோகஸ்தர்கள், சில்லறை வியாபாரம் செய்பவர்கள், தெருவோர கடை வைத்திருப்பவர்கள், தலை சுமையாக தூக்கிச் சென்று வியாபாரம் செய்பவர்கள், வாகனங்களில் எடுத்து சென்று பொருட்களை விற்பனை செய்பவர்கள் என அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வியாபாரம் செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத கடைகள் நடத்தி வருவது தெரியவந்தால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகர், நல்லதம்பி ஆகியோர் உடனிருந்தனர்.