சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வாகனங்களை தனிக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, துணை கமிஷனர் லாவண்யா, பயிற்சி கலெக்டர் சங்கீத் பல்வந்த் வாகி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பள்ளிகள் ஜூன் மாதத்தில் திறக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போலீசார் மற்றும் கல்வித்துறை அலுவலர்களை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி பஸ்களையும் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சாலை விதிகள் குறித்தும், அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆசிரியர்கள் மூலமாக அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டும்
வாகன ஓட்டிகளுக்கு உதவிடும் வகையில் தேவையான இடங்களில் மின்விளக்குகள், வேகத்தடைகள், சாலைகள் மற்றும் மலைப்பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டு இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். ஏற்காடு உள்ளிட்ட சாலைகளில் அதிக அளவிலான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகள், சரக்கு வாகனங்களில் அதிகமான பொருட்கள் ஏற்றுவதை வாகன உரிமையாளர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
போலீஸ் துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சாலை விபத்து இல்லாத சேலம் மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.