பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசிக்க ஏற்பாடுகள்; போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாணத்திற்கு பக்தர்கள் வரும் பகுதிகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்தார். மேலும் விழாவிற்கு வருபவர்கள் வாகனம் நிறுத்துமிடம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாணத்திற்கு பக்தர்கள் வரும் பகுதிகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்தார். மேலும் விழாவிற்கு வருபவர்கள் வாகனம் நிறுத்துமிடம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மீனாட்சி திருக்கல்யாணம்
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்வான வருகிற 30-ந் தேதி பட்டாபிஷேகம், 2-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 3-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இதில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள்.
கோவிலின் உள்ளே நடைபெறும் திருக்கல்யாணத்திற்கு சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கோவிலுக்கு வருகை தருவார்கள். இது தவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் சுவாமியை பார்க்க பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் கோவிலுக்கு வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து போலீசார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் கமிஷனர் ஆய்வு
நேற்று காலை மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் போலீசார் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் திருக்கல்யாணம் நடைபெறும் பகுதி மற்றும் அங்கு பக்தர்கள் எந்ெதந்த வழிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பக்தர்கள் எவ்வித தொந்தரவு செய்யாமல் அனைவரும் சுவாமி தரிசனம் செய்யும் வண்ணம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இது தவிர திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்கள் அவர்களது வாகனங்களை எங்கு நிறுத்தலாம். முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதற்காக ஆவணி மூலவீதிகள், மாசி வீதிகள் மற்றும் மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று கமிஷனர் ஆய்வு செய்தார். அதில் மிகவும் முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் மேலஆவணி மூலவீதி தெற்கு பகுதியிலும், அதில் பிங்க் நிற பாஸ் வைத்திருப்பவர்கள் வடக்கு ஆவணி மூலவீதியிலும், நீல நிற பாஸ் வைத்திருப்பவர்கள் தெற்கு ஆவணி மூலவீதியிலும், பொதுமக்கள் வாகனங்கள் மேற்கு, தெற்கு, வடக்கு மாசி வீதிகளில் நிறுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தேர்திருவிழா நடைபெறும் போதும் பொதுமக்கள் வாகனங்கள் மாரட் வீதிகளில் நிறுத்தலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.