கபிலர்மலை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

Update: 2023-03-17 18:45 GMT

பரமத்தி வேலூர்:

கபிலர்மலை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கபிலர்மலை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது சோழசிராமணியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அவர் நேரில் சென்றார். அங்கு மாணவ-மாணவிகளின் கற்றல் திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவ-மாணவிகளை புத்தகங்களை வாசிக்க சொல்லி, நன்றாக படிக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து, பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் அங்கன்வாடி மையத்துக்கு வந்திருந்த குழந்தைகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து குழந்தைகளின் வருகை, ஊட்டச்சத்து நிலை, குழந்தைகளுக்கு அட்டவணைப்படி உணவுகள் வழங்கப்படுகிறதா?, என்று பணியாளரிடம் கேட்டறிந்தார். மேலும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

அறிவுறுத்தல்

பின்னர் சோழசிராமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் நீர்வரத்து கால்வாய் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பணியை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்