பர்கூர் பேரூராட்சி, மத்தூர் ஒன்றியத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

Update: 2022-09-21 18:45 GMT

மத்தூர்:

பர்கூர் பேரூராட்சி, மத்தூர் ஒன்றியத்தில் நடந்து வரும் ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார்.

திட்டப்பணிகள்

பர்கூர் பேரூராட்சியில் 2022-2023-ம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கே.எஸ்.கோவிந்தசெட்டி தெரு முதல் அய்யப்பன் கோவில் வரை ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, கணேஷ் நகர் மற்றும் நேரலகோட்டை முதல் கோதியலகனூர் வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.26 லட்சம் மதிப்பில் காந்தி பஜாரில் கழிவுநீர் கால்வாய், வேலுநகர், கணேஷ் நகரில் புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எம்.ஜி.ஆர். நகர், அப்பண்ண செட்டி தெரு, காச்சக்கா தெரு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சாலை ஆகிய பகுதிகளில் ரூ.16 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மத்தூர்

பின்னர், மத்தூர் ஊராட்சி ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் செங்கல், சிமெண்டு கலவை தரம் குறித்து ஆய்வு செய்தார்.

கண்ணன்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட, கூச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டிடங்களை ஆய்வு செய்தார். மேலும் பள்ளிக்கு மாணவர்களின் வருகை குறித்தும், ஆசிரியர்களின் வருகை குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

ரூ.5 கோடி திட்டப்பணிகள்

மொத்தம் ரூ.5 கோடியே 4 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் நடந்து வரும் அரசு திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து, அவற்றை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன், உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், துரைசாமி, பொறியாளர்கள் ஜமுனா, பூம்பாவை, மகேந்திரன், பணி மேற்பார்வையாளர்கள் வேடியப்பன், உதயசூரியன், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஜான் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்