6 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று போதமலை பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு

போதமலையில் உள்ள அரசு பள்ளிக்கு 6 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று முதன்மை கல்வி அதிகாரி மகேஷ்வரி ஆய்வு செய்தார்.

Update: 2022-08-09 14:26 GMT

நாமக்கல்:

போதமலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் ஒன்றியத்தில் உள்ளது போதமலை. அடிவாரத்தில் இருந்து போதமலை 6 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது கரடு முரடான மலைப்பாதையாகும். சரியான சாலை வசதி இல்லை. இதனால் இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் வெண்ணந்துார் அடிவார பகுதியில் குடியேறிவிட்டனர்.

போதமலையில் உள்ள கீழுர், மேலூர் என 2 கிராமங்களிலும் அரசு பள்ளிகள் உள்ளன. இங்குள்ள அரசு பள்ளிகளை கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றால் அடிவாரத்தில் இருந்து 6 கி.மீ. நடந்து தான் செல்லவேண்டும். எனவே ஆய்வினை தவிர்த்து விடுவார்கள்.

முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு

ஆனால் தற்போதைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வெண்ணந்தூர் வட்டார கல்வி அலுவலர் வளர்மதி, பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் மலை கிராமத்துக்கு சுமார் 6 கி.மீ. தூரம் நடந்து சென்றார். பின்னர் போதமலை கீழுரில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிட தொடக்கப்பள்ளியில் அவர் ஆய்வு செய்தார். இந்த பள்ளியில் 1-ம் வகுப்பில் மாணவர்கள் இல்லை. 2, 3, 4 மற்றும் 5-ம் வகுப்பில் தலா ஒரு குழந்தைகள் என மொத்தம் 4 குழந்தைகள் மட்டும் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சிவகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மலை கிராமத்திலேயே தங்கியிருந்து குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.

இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கற்றல் திறனை முதன்மை கல்வி அலுலவர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். பின்னர் குழந்தைகளுக்கு நல்ல முறையில் கல்வி கற்பிக்கும் படி தலைமை ஆசிரியரை கேட்டுக்கொண்டார். மேலும் அந்த பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் இருந்ததால், புதிய கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக அருகில் உள்ள சமுதாயகூடத்துக்கு பள்ளியை மாற்றும்படி தலைமை ஆசிரியரை அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்