கிருஷ்ணகிரிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் வருகை:முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு

Update: 2023-09-24 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரிக்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இதையொட்டி விழா முன்னேற்பாடு பணிகளை தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் கலெக்டர் சரயு, எம்.எல்.ஏ.க்கள் மதியழகன், ஒய்.பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் அர.சக்கரபாணி கூறியதாவது:- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சென்னப்பள்ளி ஊராட்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக ரூ.26 கோடியே 81 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளையும், மருதாண்டப்பள்ளி சூளகிரி சிப்காட் வளாகத்தில் நவீன மின்வாகன பூங்கா அமையவுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து குந்தாரப்பள்ளி குமரன் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். கார்டு மற்றும் கையேடுகளை வழங்குகிறார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பழங்குடியினர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் சாதி சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். மேலும் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகள் சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, தாசில்தார் விஜயகுமார், தனி தாசில்தார் சம்பத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்