ஓசூரில் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு

Update: 2023-08-15 19:45 GMT

ஓசூர்

ஓசூரில் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

மிளகுடன் கருப்பு சாயம்

ஓசூர் பஜார் தெருவில் உள்ள மளிகை கடைகளில், மிளகுடன் கருப்பு சாயம் பூசப்பட்ட பட்டாணி பருப்பு கலந்து பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் சரயு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஓசூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் முத்துமாரியப்பன் மற்றும் அலுவலர்கள் புகார் வந்த கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். பின்னர், சந்தேகத்திற்குரிய மிளகு நறுமண பொருட்களில் இருந்து உணவு மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்காக அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடை உரிமையாளருக்கு நோட்டீஸ்

மேலும், மிளகு பொருட்களை எங்கிருந்து, யாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது? என்ற விவரம் கேட்டு கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர். இது தொடர்பாக, உணவு மாதிரியின் ஆய்வறிக்கை வந்தபின் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மளிகை பொருட்களில் கலப்படம் செய்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்