தர்மபுரி கங்கரன் குட்டை பகுதியில்ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடம்கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
தர்மபுரி
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட கங்கரன் குட்டை பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடம் கட்டும் பணியினை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வீடற்றோருக்கான தங்குமிடம்
தர்மபுரி நகராட்சி சந்தைப்பேட்டையில் உள்ள ஒரு தற்காலிக கட்டிடத்தில் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடம் அமைந்துள்ளது. இந்த தங்கும் இடத்தில் வீடற்றவர்கள், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கி பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தொண்டு நிறுவனத்தினர் கண்காணித்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட கங்கரன் குட்டை பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நகர்ப்புற வீடற்றோருக்கான தங்குமிடத்தில் தங்குபவர்களுக்கான செய்து கொடுக்கப்படும் வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் கேட்டு அறிந்தார். இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
இதனை தொடர்ந்து தர்மபுரி பிடமனேரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது தர்மபுரி நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன், பொறியாளர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனந்தராமன், விஜயரங்கன், சத்யா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.