அனைத்து துறைகளின் திட்ட விளக்க கையேடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு அனைத்து துறைகளின் திட்ட விளக்க கையேடு வழங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியறுத்தி பேசினர்.

Update: 2023-10-03 13:14 GMT

விவசாயிகளுக்கு அனைத்து துறைகளின் திட்ட விளக்க கையேடு வழங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியறுத்தி பேசினர்.

குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் துரிஞ்சாபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

கூட்டுறவு சங்கங்களில் விதை நெல் மற்றும் மணிலா ஆகியவற்றை கூடுதலாக இருப்பு வைத்திருக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

ஆவின் பால் முத்தரப்பு கூட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலை எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக் கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்பட விவசாயிகள் சார்ந்துள்ள அனைத்து துறைகளின் திட்ட விளக்க கையேடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறைரீதியான நடவடிக்கை

ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும். கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை, தகுதியான அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்