பூச்சி கடித்ததில் சிறுமி உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு சம்பவங்களில் பூச்சி கடித்ததில் சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-06-07 20:21 GMT

திருச்சி, ஜூன்.8-

வெவ்வேறு சம்பவங்களில் பூச்சி கடித்ததில் சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள்.

4-ம் வகுப்பு மாணவி

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் இந்திராநகர் கருமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரவிசங்கர்-ஆதிலட்சுமி தம்பதியின் மகள் ரோசினி (வயது 9). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி இரவு, வீட்டின் அருகில் உள்ள கடையில் தோசை வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டார். நள்ளிரவில், அவர் திடீரென மயக்கம் அடைந்தார். அத்துடன், அவருடைய வாயில் இருந்து நுரை வந்துள்ளது.

இதனால் பதறிய பெற்றோர் அவரை உடனே சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி ரோசினி, ஏதோ பூச்சி கடித்ததால் இறந்தது தெரியவந்தது.

பூச்சி கடித்து சாவு

இதுபோல், திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த மனோகரன் (54) சம்பவத்தன்று ஆட்டுக்கு தலை பறிக்க சென்றபோது, ஏதோ பூச்சி கடித்ததில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

Tags:    

மேலும் செய்திகள்