திருவாவடுதுறை ஆதீன மடத்தில் 'கல்வெட்டு'
நாடாளுமன்றத்தில் செங்கோல் கொடுத்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் கல்வெட்டை சிறப்பு பூஜைகள் செய்து ஆதீனம் திறந்து வைத்தார்.
குத்தாலம்:
நாடாளுமன்றத்தில் செங்கோல் கொடுத்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் கல்வெட்டை சிறப்பு பூஜைகள் செய்து ஆதீனம் திறந்து வைத்தார்.
நாடாளுமன்றத்தில் செங்கோல்
நாடு சுதந்திரம் பெற்றபோது அதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தங்க செங்கோல் செய்யப்பட்டு மவுன்ட்பேட்டன் பிரபுவிடம் கொடுத்து அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு மேலாக பொருத்தப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகள்
கடந்த மாதம் திருவாவடுதுறை ஆதீனம் மாசிலாமணி அம்பலவாண தேசிக பரமாசாரிய சாமிகள், தனி விமானத்தில் டெல்லி சென்று தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்களுடன் இணைந்து பிரதமரிடம் செங்கோலை வழங்கினார்.
1947-ல் இதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்று பல்வேறு தரப்பினர் சர்ச்சைகளை எழுப்பினர். இது குறித்து மடத்தில் எந்த பதிவேடும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கல்வெட்டு
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் திருவாவடுதுறை ஆதீனம், பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் இடமான ஒடுக்கத்தின் வெளி சுவற்றில் செங்கோல் வழங்கும் நிகழ்வை கல்வெட்டாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்த கல்வெட்டை திருவாவடுதுறை ஆதீனம் மாசிலாமணி அம்பலவாண தேசிக பரமாசாரிய சாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்தார்.
தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.