டி.என்.பி.எஸ்.சி.யின் குளறுபடிகள், முறைகேடுகள் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி.யின் குளறுபடிகள், முறைகேடுகள் பற்றி விசாரணை தேவை என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-07-31 06:59 GMT

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 116 குரூப்-2 பணிகள், 5,413 குரூப்-2ஏ பணிகள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அவற்றில் குரூப்-2ஏ நிலையிலான 926 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களும் அடங்கும். அந்தப் பணிகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற 50 ஆயிரம் பேருக்கு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது.

முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல், கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் நிறைவடைந்து கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தேர்ச்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதன்பின், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கான கல்விச் சான்றிதழை சரிபார்ப்பதில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்ற 127 பேருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலில் இ.ஆ.ப. அதிகாரிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சலுகை காட்டியிருப்பதும், மற்றவர்களுக்கான வாய்ப்புகளை பறித்திருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கு தேர்வர்கள் எந்த வகையிலும் காரணமல்ல. அவர்களின் சான்றிதழ்களை முறையாக சரிபார்க்கத் தவறிய அதிகாரிகள் தான் காரணம். எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 36 தேர்வர்கள் இ.ஆ.ப. அதிகாரிகள் சிலர் கொடுத்த அழுத்தத்தால் பணியில் சேர்க்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்த விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தேர்ச்சி சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட 127 பேரும் தாங்கள் படித்த கல்வி நிறுவனங்களில் இருந்து உண்மைத்தன்மை சான்று பெற்று கொடுத்து இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியில் சேர அனுமதிக்க வேண்டும்; அதற்கு வாய்ப்பில்லை என்றால் அவர்களுக்கு தகுதிக்கேற்ற வேறு 2ஏ தொகுதி பணி வழங்கப்பட வேண்டும். அதுவரை மற்றவர்களுக்கு முதல்-அமைச்சரின் கைகளால் பணி நியமனச் சான்று வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்