மக்கள் நலனில் அக்கறைக்காட்டி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

திராவிட மாடல் ஆட்சியில் தான் மக்கள் நலனில் அக்கறைக்காட்டி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2023-09-11 17:35 GMT

திராவிட மாடல் ஆட்சியில் தான் மக்கள் நலனில் அக்கறைக்காட்டி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

கோரிக்கை மனுக்கள்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்தியந்தல் மற்றும் ஆடையூர் ஊராட்சிகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டா- சிட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட அவர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறார்.

அத்தியந்தல் மற்றும் ஆடையூர் ஊராட்சிகளில் 15-வது நிதி குழுவிலிருந்து குடிநீர் குழாய், கழிவுநீர் பக்க கால்வாய், பள்ளி கூடுதல் வகுப்பறைகள், பண்ணை குட்டைகள், அங்கன்வாடி புதிய கட்டிடம், சிமெண்டு சாலை பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

வருகிற 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

திருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை நான் தொடங்கி வைக்க உள்ளேன். எனவே அன்றைய தினம் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. அதில் இருந்து 15 நாட்களுக்குள் குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.

இதில் யாருக்காவது உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றால் வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று முறையிடலாம்.

திராவிட மாடல் ஆட்சி

மேலும் தற்போது பெறப்பட்டு உள்ள கோரிக்கை மனுக்கள் மீது தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு கட்டாயமாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்.

மேலும் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் எந்தவித மக்கள் நலப்பணிகளும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தற்போது ஆட்சி பொறுப்பேற்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தான் மக்கள் நலனில் அக்கறைக்காட்டி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், தி.மு.க. நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், கார்த்திவேல்மாறன், அருணை வெங்கட், மெய்யூர் சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்