காயமடைந்த என்ஜினீயரிங் மாணவர் சாவு

பூதப்பாண்டி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பலியானதை தொடர்ந்து அவரது நண்பரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

Update: 2023-05-28 18:45 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பலியானதை தொடர்ந்து அவரது நண்பரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

நண்பர்கள்

பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலத்தை அடுத்த நாவல்காடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன், கொத்தனார். இவருடைய மகன் கணேஷ் (வயது 19). இவர் ஒரு கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார். நாவல்காடு ஜவகர் தெருவைச் சேர்ந்தவர் குமார் மகன் அபிஷேக் (19). இவர் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கணேசும், அபிஷேக்கும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் இருவரும் துவரங்காடு பகுதியில் இருந்து நாவல்காட்டிற்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கணேஷ் ஓட்டினார். அபிஷேக் பின்னால் அமர்ந்திருந்தார்.

மாணவர் பலி

மோட்டார் சைக்கிள் ஈசாந்திமங்கலத்தை கடந்து மாங்குளம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அபிஷேக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நண்பரும் சாவு

இந்தநிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அபிஷேக்கும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவரை தொடர்ந்து அவரது நண்பரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்