மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் காயம்
மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பாகனூர் கிராம நிர்வாக அலுவலகமானது, மணலூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகத்திடம் விவசாயிகள் 2 பேர் தகவல்கள் கேட்டு பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் மெக்கவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 60) என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர் தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக கிராம நிர்வாக அதிகாரி உள்பட மற்ற 2 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.