பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் அடுத்த ஆண்டு போக்குவரத்து தொடங்கும் என தகவல்

பாம்பன் கடலில் நடந்து வரும் புதிய ரெயில் பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது.;

Update: 2022-06-03 22:58 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. தற்போதுள்ள பாலம் அமைத்து 105 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பாலத்துக்காக கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும் மண்டபம் பகுதியில் இருந்து தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணியும் கடந்த 3 மாதத்திற்கு மேலாக தீவிரமாக நடந்து வருகின்றது. இதனிடையே புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் அமையவுள்ள தூக்கு பாலத்தை பொருத்தும் பணியானது இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது. பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்துக்காக 99 இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன. ஒவ்வொரு இரும்பு கர்டரும் சுமார் 20 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் நாலரை அடி உயரமும் கொண்டதாகும். கர்டரின் எடை 55 டன் இருக்கும். அதுபோல் மையப் பகுதியில் உள்ள புதிய தூக்கு பாலத்தை பொருத்தும் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்