தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த கூடாது-வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை ஈ தாக்குதல்
சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 8,264 எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நிலவும் அதிக வெயில் காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. மேலும், தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, விவசாயிகள் தென்னையில் ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈ மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைப்பிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. டிராக்டருடன் இணைக்கப்பட்ட அல்லது தென்னைக்கான பிரத்யேக தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையின் அடிப்புறத்தில் பீய்ச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்க வேண்டும். அல்லது, 5-க்கு 1.5 அடி நீள அகலமுள்ள மஞ்சள் ஒட்டுப்பொறிகளை ஒரு ஏக்கருக்கு 8 எண்கள் என்ற அளவில் தென்னை மரங்களுக்கு இடையே கட்டி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது பசை தடவி வைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
கிரைசோபெர்லா
மேலும் இயற்கையிலேயே காணப்படும் என்கார்சியா ஒட்டுண்ணி கூட்டுப் புழுக்களை கண்டறிந்து ஒரு ஏக்கருக்கு 10 ஓலைத்துணுக்குகளை (100 என்கார்சியா கூட்டுப்புழுக்களை) ரூகோஸ் வெள்ளை ஈக்கள் காணப்படும் தோப்புகளில் உள்ள தென்னை மரங்களில் பரவலாக ஓலையில் பொருத்த வேண்டும். என்கார்சியா ஒட்டுண்ணி ஆதார தோப்புகளை ஒவ்வொரு கிராமங்களிலும் கண்டறிந்து அதன் ஓலை துணுக்குகளை மற்ற வெள்ளை ஈ தாக்குதல் உள்ள தோப்புகளில் வைத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கிரைசோபெர்லா இரை விழுங்கி முட்டைகள் ஒரு ஏக்கருக்கு 400 எண்கள் வீதம் பாதிக்கப்பட்ட தென்னை இலைகளில் ஆங்காங்கே பொருத்த வேண்டும். கிரைசோபெர்லா இரை விழுங்கிகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனா்களை அணுகி பெற்றிடலாம். கிரைசோபெர்லா, 400 எண்களின் விலை ரூ.120 மட்டுமே. இது மதுரை விநாயகபுரம் உயிரியல் கட்டுப்பாட்டுகாரணிகள் உற்பத்திமையத்தில் கிடைக்கிறது.
ரூகோஸ் வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்புறத்தில் கூட்டமாக இருந்து சாறு உறிஞ்சும் போது தேன் போன்ற திரவத்தை வெளியிடுகிறது. இத்திரவம் கீழுள்ள மட்டைகளில் மேற்புறத்தில் படிந்து கருப்பு நிறப்பூஞ்சணம் வளர்வதால் இலைகள் கருப்பாக காணப்படும். இதனை கட்டுப்படுத்த 2 சதவீத ஸ்டார்ச் கரைசலை (மைதா) தெளிப்பதன் மூலம் இலைகளின் மேல் உள்ள கரும்பூஞ்சணம் காய்ந்து விழுந்துவிடும். தென்னையில் வௌ்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ராசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது. தாக்குதல் மிக அதிகமாக இருந்தால் அசாடிராக்டின் அல்லது வேம்புசார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளித்துக் கட்டுப்படுத்தலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே சிவகங்கை மாவட்ட தென்னை சாகுபடியாளர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திடலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.