ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலம் ஏப்ரலில் பயன்பாட்டிற்கு வரும்

ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலம் ஏப்ரலில் பயன்பாட்டிற்கு வரும் என தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-03-09 18:45 GMT

ராஜபாளையம். 

ராஜபாளையம் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை விரிவுபடுத்த வந்திருந்த குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. சந்தித்தார். அப்போது, ராஜபாளையம் நகரில் சத்திரப்பட்டி-வெம்பக்கோட்டை சாலையில் ரெயில்வே மேம்பால பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாலம் அருகில் சர்வீஸ் ரோடு அமைய இருக்கும் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்காக பதிக்கப்பட்ட குழாய்களில் கசிவு ஏற்படுவதாக அடிக்கடி தோண்டுகின்றனர். இதனால் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி தாமதம் ஏற்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்.

அதேபோல குடிநீர் குழாய்கள் பதித்து பல ஆண்டுகளாக செட்டியார்பட்டி பேரூராட்சியில் இருந்து சேத்தூர் பேரூராட்சிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் முகவூர் மற்றும் முத்துச்சாமியாபுரம் ஊராட்சி பகுதிகளிலும், கிருஷ்ணாபுரம் மெயின் தெருவிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இந்த குழாய்களை புதுப்பிக்க வேண்டும் என மனு அளித்தார். அதற்கு நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் கிராமப்பகுதிகளில் தாமிரபரணி குடிநீர் குழாய்களை புதுப்பிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும் என்றார். பின்னர் ரெயில்வே மேம்பால பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பொறியாளர் ராஜாமணி, நகராட்சி பொறியாளர் ரத்தினவேல் நேரில் பார்வையிட்டனர். அப்போது ஏப்ரல் மாதம் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார். அப்போது, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்