அறுந்து விழுந்த மின்கம்பிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்
விபத்துகளை தவிர்க்க அறுந்து விழுந்த மின்கம்பிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மின்சார வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் மின்விபத்துக்களை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தாதீர்கள். மின்கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டாதீர்கள். அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல வேண்டாம். இடி அல்லது மின்னலின் போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருக்க வேண்டாம். மேலும் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் பற்றி தெரிந்தால், அது குறித்த தகவலை மின்சார வாரிய செல்போன் எண் 9498794987 மூலமாகவோ அல்லது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தையோ தொடர்பு கொண்டோ தெரிவிக்கவும். எனவே இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடித்து மின் விபத்துக்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.