தொழில்துறை கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

‘பீக் ஹவர்ஸ்’ கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தொழில் துறை கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 25-ந் தேதி தொழில் நிறுவனங்களை அடைத்து கருப்புக்கொடி ஏற்ற முடிவு செய்து உள்ளனர்.

Update: 2023-09-07 18:45 GMT
கோவை


'பீக் ஹவர்ஸ்' கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தொழில் துறை கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 25-ந் தேதி தொழில் நிறுவனங்களை அடைத்து கருப்புக்கொடி ஏற்ற முடிவு செய்து உள்ளனர்.


மின்கட்டண உயர்வு


தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதன் ஒருபகுதியாக தொழில் துறையினருக்கான நிலை கட்டணம், பீக்ஹவர் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டது. அதை திரும்ப பெற வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிறு-குறு தொழில் முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் கோவையை அடுத்த காரணம்பேட்டையில் நேற்று அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.


இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து போராடுவோம்


உண்ணாவிரத போராட்டத்தில் நிலை கட்டணம் உயர்வு, பீக்ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். இது குறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ், சுருளிவேல் ஆகியோர் கூறியதாவது:-


மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தமிழக அமைச்சர்க ளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தொழில்துறை மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளது. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழக முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.


கருப்புக்கொடி ஏற்ற முடிவு


இந்த விவகாரத்தில் தமிழக முதல் - அமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும். அதுவரை தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். வருகிற 11-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில் அமைப்புகளை ஒன்றிணைத்து தமிழக முதல்- அமைச்ச ருக்கு இ- மெயில், கொரியர் மூலம் கோரிக்கை மனு அனுப்ப உள்ளோம்.


24-ந் தேதி வரை மனு அனுப்பும் போராட்டம் நடைபெறும். 25-ந் தேதி தொழில் நிறுவனங்களை அடைத்து கருப்புக்கொடி ஏற்ற முடிவு செய்து உள்ளோம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்