அடிப்படை வசதி இன்றி தவிக்கும் பழங்குடி மக்கள்

குன்னூர் அருகே அடிப்படை வசதி இன்றி பழங்குடி மக்கள் தவித்து வருகின்றனர். அவர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-06-30 12:48 GMT

ஊட்டி

குன்னூர் அருகே அடிப்படை வசதி இன்றி பழங்குடி மக்கள் தவித்து வருகின்றனர். அவர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பழங்குடியின கிராமம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட உலிக்கல் பேரூராட்சியில் குரங்குமேடு கிராமம் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், குரும்பர் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் அவர்கள் தேயிலை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கிராமத்தில் மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. அன்றாடம் பயன்படுத்தும் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். குடிநீரை குடங்களில் தலையில் சுமந்து வனப்பகுதி வழியாக வரும்போது, வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

நிரந்தர தீர்வு

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால், மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. நடைபாதை வசதி கூட இ்ல்லாமல் கரடு, முரடான பாதையில் நடந்து செல்கிறோம். மின்சார வசதி இல்லாததால், சூரிய மின்சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

பலமுறை அதிகாரிகள் வந்து, எங்கள் கிராமத்தில் ஆய்வு செய்துவிட்டு செல்கின்றனர். ஆனால் எங்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த கிராமம் காப்புக்காடாக உள்ளது. எனினும் அங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்