இந்திய ஒற்றுமை பாதயாத்திரை: 4-வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
இந்திய ஒற்றுமை பாதயாத்திரையின் 4-வது நாள் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார்.
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதையடுத்து தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நேற்று 3-வது நாள் பாதயாத்திரையை ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இருந்து காலை 7 மணிக்கு தொடங்கினார். வில்லுக்குறியில் மலர் பாதை அமைத்து ராகுலுக்கு வரவேற்பு அளிக்கபட்டது. நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டார்.
3-வது நாள் நடைபயணத்தில் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார். தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுடன் கலந்துரையாடினார். மேலும் திறந்தவெளியில் பாரம்பரிய கிராமத்து உணவு சமைப்பது குறித்த வீடியோக்களுக்காக பிரபலமான யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனலின் உறுப்பினர்களை ராகுல் காந்தி சந்தித்தார். 3-வது நாள் பாதயாத்திரையை முளகுமூட்டில் நிறைவு செய்தார்.
இந்நிலையில் கன்னியாகுமரி முளகுமூடு பகுதியில் இருந்து 4-வது நாள் நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். இன்றுடன் தமிழகத்தில் பாதயாத்திரையை முடித்துகொண்டு கேரளா செல்கிறார் ராகுல் காந்தி. நாளை கேரளாவில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார்.