உலகத்தை வழிநடத்தும் நாடாக இந்தியா மாற வேண்டும்

‘2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினவிழா கொண்டாடும் சமயத்தில் உலகத்தை வழிநடத்தும் நாடாக இந்தியா மாற வேண்டும்’ என்று வேலூரில் நடந்த பாலாறு பெருவிழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி விருப்பம் தெரிவித்தார்.

Update: 2022-06-29 12:14 GMT

'2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினவிழா கொண்டாடும் சமயத்தில் உலகத்தை வழிநடத்தும் நாடாக இந்தியா மாற வேண்டும்' என்று வேலூரில் நடந்த பாலாறு பெருவிழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி விருப்பம் தெரிவித்தார்.

பாலாறு பெருவிழா

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணிபீடம் சக்தி அம்மா மற்றும் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மண்டபத்தில் 5 நாட்கள் நடக்கிறது.

இதன் தொடக்க விழா இன்று நடந்தது. விழாவிற்கு பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் தலைமை தாங்கினார். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், மன்னார்குடி ஜீயர் சென்டு அலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சக்தி அம்மா ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பாலாறு பெருவிழாவை தொடங்கி வைத்தனர்.

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

மின்சாரம் தயாரிப்பு

காலநிலை மாற்றம் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. கார்பன் வெளியேற்றத்தால் உலகம் பலதரப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கிறது. குறிப்பாக பனிக்கட்டி உருகுகிறது. பனிப்பாறை மறைந்து போகிறது.

இதற்கு எல்லாம் என்ன காரணம் என்றால் உலகரீதியான வாழ்வை தேடி அனைத்து நாடுகளும் சென்றன. அந்த நாடுகள் தற்போது இந்தியாவை எதிர்நோக்குகின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரியஒளி மற்றும் காற்றாலை மூலம் சர்வதேச மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இதில் நாம் சாதிக்க முடியுமா என்று பல நாடுகள் சந்தேகித்தன. தற்போது இந்த திட்டத்தில் 100 நாடுகள் இணைந்துள்ளன. இந்த திட்டத்தில் 2025-ம் ஆண்டிற்குள் 100 ஜிகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் நாம் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அந்த இலக்கை எட்டி விட்டோம். தற்போது 2025-ம் ஆண்டிற்கு 500 ஜிகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உலகத்தை வழிநடத்தும் நாடாக...

ஆற்றலை சேமிப்பதும், இயற்கையை சமநிலைப்படுத்துவதிலும் உலகிற்கு நாம் எடுத்துக்காட்டாக உள்ளோம். ஏனெனில் நாம் பூமியை வணங்குகிறோம். அதுவே நமது அடையாளம்.

ஆதிகாலம் முதல் பஞ்ச பூதங்களை நாம் வணங்கி வருகிறோம். இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்களே, அதுதான் சனாதனம். என்னுடைய குழந்தை பருவத்தில் நீரை வழிபட்டுள்ளேன்.

இந்திய நாடு தற்போது கூடுதலான தன்னம்பிக்கையால் தனது விதியை உணர்த்துகிறது. நமது முன்னோர்களின் கனவாகிய பொருள் செழிப்பு, ராணுவ பலம், அறிவார்ந்த மேன்மை, தொழில்நுட்ப முன்னிலை போன்றவற்றை உள்ளடக்கிய இந்தியா தற்போது உருவாகி கொண்டிருக்கிறது.

2047-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி 100-ம் ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாடும் சமயத்தில் இந்தியா உலகத்தை வழிநடத்தும் நாடாக மாற வேண்டும்.

இந்தியாவில் ஆன்மிக மறுமலர்ச்சி உருவாக மதத்தலைவர்களுக்கு பொறுப்பு உள்ளது. அப்போது தான் சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட நாடும் உருவாகும். நதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சாதுக்கள், சன்னியாசிகளுக்கு நன்றி.

இவ்வாறு கவர்னர் கூறினார்.

நதியை பாதுகாப்பது கடமை

விழாவில் சக்தி அம்மா அருளாசி வழங்கி பேசுகையில், நதிகள் தாய், தந்தை, தெய்வத்துக்கு இணையானது. கடவுளிடம் நாம் என்ன வேண்டுதல் வைக்கிறோமோ அதனை நிறைவேற்றுகிறது நதி.

ஒரு மனிதனுக்கு உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை, மகிழ்ச்சி, நீண்ட ஆயுள் ஆகியவற்றுக்கு ஆதாரமாக இருப்பது நதி. இந்தியாவில் நதிக்கரையோரத்தில் தான் கோவில்கள் அமைந்திருக்கும்.

அதேபோன்று திருவிழாக்களும் நதிக்கரையோரம் தான் நடக்கும். நதியால் மட்டுமே தண்ணீர் பிரச்சினை தீரும். விவசாயம் செழிக்கும்.

நதியை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். முன்னோர்கள் நீர்நிலையை பாதுகாக்க அதிக மரங்கள் வளர்த்தார்கள்.

மரங்களை தெய்வமாக வணங்கும் பழக்கமும் இருந்தது. இயற்கையை விட்டு நாம் வெளியே வந்ததால் தான் பல்வேறு குழப்பங்கள், பிரச்சினைகள் உருவாகின. நமது முன்னோர்கள் 100 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

அதற்கு இயற்கை பிரபஞ்ச சக்திதான் காரணம். அதேநிலை தற்போது தொடர இயற்கையை பாதுகாப்பது அவசியம். அதன்மூலம் நதிகள் ஜீவநதிகளாக இருக்கும்.

நம் முன்னோர்கள் உருவாக்கிய ஏரி, ஆறு, குளம், நதிகளை நாம் பாதுகாத்தாலே போதுமானதாகும். நதியின் பெருமை, அதை காக்க வேண்டிய அவசியம் ஆகியவை தான் பாலாறு பெருவிழாவின் முக்கிய நோக்கமாகும்.

சாதுக்கள், சன்னியாசிகள் தாங்கள் இருக்கும் பகுதியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.

விழாவில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்க அமைப்பாளர் சுவாமி சிவராமானந்தா, செயலாளர் சேலம் ஆத்மானந்தா, பொருளாளர் வேதஆனந்தா, பாலாறு மக்கள் இயக்க தலைவர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்