இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்

இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்று கோவை திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-09-16 19:15 GMT
கோவை


இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்று கோவை திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.


திருமண வரவேற்பு விழா


கோவை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இல்ல திருமண வரவேற்பு விழா தொண்டாமுத்தூரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.


கோவை கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


பின்னர் கார் மூலம் தொண்டாமுத்தூருக்கு சென்றார். மணமக்கள் பிரபாகரன் - இந்துஜா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-


வாழ்த்தும் தாய்மார்கள்


இது திருமண வரவேற்பு விழாவாக இருந்தாலும், பெரிய மாநாடு போல் இருக்கிறது. ஒட்டு மொத்த தமிழ்நாடும் இங்கு வந்துள்ளது. தி.மு.க. வில் உழைத்தால் உயர்வு உண்டு என்பதற்கு இது உதாரணம். தமிழக மகளிர், தாய்மார்கள் அனைவரும் இப்போது முதல் - அமைச்சரை வாழ்த்தி வருகின்றனர். அது உங்களுக்கு தெரியும்


தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் மகளிர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அண்ணாவின் பிறந்தநாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாகவே இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. அதை உடைத்து தாய்மார்களுக்காகவும், மகளிருக்காகவும் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் தி.மு.க.


அ.தி.மு.க. அணிகள்


அ.தி.மு.க.வை பொறுத்தவரை பல அணிகள் இருக்கின்றது. ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி, தீபா அணி, தீபாவின் டிரைவர் அணி, இன்று கூட நான் தான் அ.தி.மு.க. என்று ஒருவர் கிளம்பியுள்ளார்.

அ.தி.முகவில் மற்றொரு அணி உள்ளது. அது தான் பா.ஜ.க. அணி. குடும்பத்திலும் மாமியார் அணி, நாத்தனார் அணி என்று இருக்கும். ஆனால் மணமக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நமது இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. அது போல் மணமக்களும் வெற்றி கூட்டணியாக இருக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


வரவேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சங்கர், கயல்விழி செல்வராஜ், ஆ.ராசா எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, நா.கார்த்திக், தளபதி முருகேசன், மேயர் கல்பனா, பைந்தமிழ் பாரி, முன்னாள் எம்.பி. நாகராஜ், தொண்டாமுத்தூர் பகுதி பொறுப்பாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்