'இந்தியா கூட்டணிக்கு தலைவரும், கொள்கையும் கிடையாது' - மத்திய இணை மந்திரி எஸ்.பி.சிங் பாகேல் பேட்டி
இந்தியா கூட்டணிக்கு தலைவரும் கிடையாது. கொள்கையும் கிடையாது என்று மத்திய இணை மந்திரி எஸ்.பி.சிங் பாகேல் கூறினார்.
இந்தியா கூட்டணிக்கு தலைவரும் கிடையாது. கொள்கையும் கிடையாது என்று மத்திய இணை மந்திரி எஸ்.பி.சிங் பாகேல் கூறினார்.
விஸ்வகர்மா திட்டம்
பிரதமர் நரேந்திரமோடியின் விஸ்வகர்மா திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மதுரை சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் பாகேல் பங்கேற்று நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பேசும்போது, "கலாசார கைவினை கலைஞர்களின் தொழில்களை, திறமைகளை, பாதுகாக்கவே விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் கலைஞர்கள், தொழிலாளர்கள் இலவசமாக பதிவு செய்து அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.இதனை தொடர்ந்து மத்திய இணை மந்திரி எஸ்.பி.சிங் பாகேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிபா வைரஸ்
விஸ்வகர்மா திட்டத்தால் தமிழகத்திற்கும், மதுரைக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை நேரடியாக சென்று பார்வையிட உள்ளேன். மக்கள்தொகை அடிப்படையில், தூரத்தை பொறுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும். மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தை தமிழகத்தில் முறையாக செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். நிபா வைரஸ் குறித்து தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம். அதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா கூட்டணிக்கு தலைவர் கிடையாது
முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே சனாதனத்தின் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. இருந்தாலும் சனாதன தர்மம் நிலையானது. இந்தியா கூட்டணிக்கு தலைவரும் கிடையாது, கொள்கையும் கிடையாது. ஏற்கனவே, இதுபோல் எதிர்க்கட்சியினர் கூட்டணி அமைத்தார்கள். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. பிரதமர் மோடி மூலம் ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள். அதனால் ஏன் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். மோடிக்கு எதிரான கூட்டணிதான் இந்தியா கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. காந்தி, எம்.எஸ்.எம்.இ. சேர்மன் முத்துராமன், பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு. நாகராஜன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மதுரை நகர் தலைவர் மகா சுசீந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.